வருவாய்த் துறை, மின் துறையினர் வசூல் வேட்டை:
தமிழகத்தில் நடப்பவை உங்களுடன் ஸ்டாலின்
முகாம்களா? உங்களுடன் ஊழல் முகாம்களா?
தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
டிஜிபி அலுவலக வளாகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு அவமானகரமான எடுத்துக்காட்டு!
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.
தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
@airportmoorthy
வைகை ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின்
முகாம் மனுக்கள்: வீண் விளம்பரத்திற்காக செயல்படும்
திமுக அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன் விளக்கியிருந்தேன். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
@CMOTamilnadu
சென்னையில் நீண்ட காலமாக போராடி வந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு, பாமக சார்பில் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று துப்புரவு தொழிலாளர்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.!
நாகூர் தர்கா 469-வது வருட கந்தூரி விழாவில் கலந்து கொள்ள வேண்டி, நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும், 11-ம் தலைமுறையுமாகிய S.K.ஹாஜா ஹுசைன் சாஹிப், ஜனாப் ஷா நவாஸ் (தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் ஊடக பிரிவு தலைவர்) ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த போது.!
ஒரு ஆண் கல்வி அறிவு பெற்றால் அவன் மட்டுமே பெற்றதற்கு சமம்..
ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் அந்த வம்சமே பெற்றதற்கு சமம்..
தலைவர் #அன்புமணிஇராமதாசு 🔥
#PattaliMakkalKatchi
தமிழின் தனிச்சிறப்பு மிக்க செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி ஊடக உலகில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தி 15-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 15-ஆம் ஆண்டு விழா காணும் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வழங்கும் முறையில் புதிய வடிவத்தை அறிமுகம் செய்த பெருமை புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு உண்டு. ஊடகங்கள் நான்காம் தூண் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்தத் தூண் தவறு செய்தாலும், அதை தட்டிக் கேட்க வேண்டும் என்ற நோக்கம் தான். நான்காம் தூண் என்பதற்கான கடமையை புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@PttvNewsX
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை: தமிழக அரசு கெஞ்ச வேண்டாம் - உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்!
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கும்படி அரசு கேட்டுக் கொண்டு வருவதாகவும், அதனால் அண்மையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து தயாரிப்பு ஆலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறியிருக்கிறார். இது சாதனை அல்ல... துரோகம்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இராஜா, வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளிமாநில தொழிலாளர்களைத் தான் பணியமர்த்த விரும்பியதாகவும், அதன் பின் தமிழக அரசு தான் அந்த நிறுவனத்திடம் நீண்ட பேச்சு நடத்தி தமிழர்களை பணியமர்த்தும்படி கேட்டுக் கொண்டதகவும், அதனால் உள்ளூர் இளைஞர்கள் 200 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மகிழுந்து ஆலையில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் பேருக்கும் மேல் அந்த ஆலையில் பணி செய்து வருகின்றனர். அவர்களில் 200 தமிழர்களுக்கு வேலை என்பது வெறும் 20% மட்டும் தான். மண்ணின் மைந்தர்கள் அளித்த 400 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் 200 தமிழர்களுக்கு மட்டுமே வேலை பெற்றுத் தரப்பட்டிருப்பது தமிழக அரசின் படுதோல்வியையே காட்டுகிறது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதைக் கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் தமிழக அரசு கெஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இப்போது குறைந்தது 750 தமிழர்கள் பணி செய்து கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு பணி கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாமல் துரோகம் செய்த திமுக அரசு, 200 பேருக்கு கெஞ்சி வேலை வாங்கிக் கொடுத்ததை சாதனையாகப் பேசிக் கொண்டிருக்கிறது.
அதேபோல்,திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அமைச்சர் இராஜா கூறியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் அப்பட்டமான பொய். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 50 தொழிற்சாலைகள் கூட திறக்கப்படவில்லை என்பது தான் உண்மை. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை நியாயப்படுத்துவதற்காக பொய்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
தொழில் முதலீடுகள் தொடர்பாக திமுக அரசு கூறும் புள்ளி விவரங்கள் உண்மை என்றால், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட 900-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்களில் முதலீடுகள் பெறப்பட்டு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய . தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1208 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும். அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் நாளான இன்று, இடஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துகிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மனதில் கொண்டு இன்று விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம்.
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
மீண்டும் அய்யா-வை @drramadoss போன்று யாரும் பிறக்க முடியாது.!
மருத்துவர் அய்யாவின் உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை.
- அண்ணன் அன்புமணி ராமதாஸ் 🥭 @draramadoss .