சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணமும், மாதாந்திர சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.735 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி மற்றும் பேருந்துகளுக்கும் ரூ.15 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை, வாகனங்களின் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லாரி, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துத் துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச் செலவை மேலும் அதிகரிக்கும். இதன் நேரடி தாக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் ஏற்பட்டு, இறுதியில் சுமையைச் சுமக்க வேண்டியது சாதாரண மக்களாகவே இருப்பார்கள்.
தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளையும், 60 கிலோமீட்டர் தூரத்திற்குக் குறைவான இடைவெளியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டிய நியாயமான கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை அகற்றுவதற்குப் பதிலாக கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மக்கள் விரோத அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு அவர்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக விவசாயிகள், சிறு மற்றும் குறு வணிகர்கள், லாரி மற்றும் பேருந்து உரிமையாளர்கள், தினசரி வாகனப் பயணத்தைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் நகர்ப்புற சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
02.09.2026
#சுங்கச்சாவடி #TollTax #TollFeeHike #சுங்கக்கட்டணஉயர்வு #விலைவாசிஉயர்வு #மக்கள்நலன் #மனிதநேயமக்கள்கட்சி #TamilNadu #NHAI
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம்
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில், அவசர அவசரமாக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நேற்றைய உரையில் எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வாசகம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனைப் பெரும் குற்றமாகக் கருதி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அளவுக்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அளவுக்கு மீறியதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதுமாகும்.
மேலும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதியம் வரை உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை எனக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பது மிகுந்த கவலைக்குரியது. நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கைது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், உச்சநீதிமன்றம் அர்னேஷ் குமார் எதிர் பீகார் அரசு (Arnesh Kumar v. State of Bihar, 2014) வழக்கில், ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இயந்திரத்தனமாகக் கைது செய்யக்கூடாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி முதலில் விசாரணை மேற்கொண்டு, கைது அவசியமானதா என்பதை காவல்துறை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது.
இத்தகைய உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாகக் கைது செய்திருப்பது பல்வேறு சட்டரீதியான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசு, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக உள்ளாடையுடன் கொலை செய்வேன் என கடுமையான மற்றும் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த இரட்டை நிலைப்பாடு அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் நாகரிகத்தைப் பேணிய திமுக, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்காக அவர்களைச் சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை.
ஆனால், தற்போதைய ஆட்சியில் சமூக வலைதளப் பதிவுகள், பொதுக்கூட்டப் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கெல்லாம் எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இது மக்கள் நல அரசுக்கான இலக்கணமும் அல்ல.
காவிரி – மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டாத தமிழ்நாடு அரசு, காவிரி உரிமைக்காகக் குரல் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதில் காட்டும் அவசரம், தமிழக விவசாயிகளின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்துவிட்டால், அனைத்து பிரச்சினைகளையும் எளிதில் கடந்து விடலாம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது.
அரசியல் விமர்சனங்களையும் எதிர்க்குரல்களையும் கைது நடவடிக்கைகளால் ஒடுக்காமல், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இப்படிக்கு,
எம். எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
04/08/2026
#உதயநிதி_ஸ்டாலின்
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பது வரலாறு,
தமிழை அழிக்க நினைக்கும் பாசிச பாஜக கும்பலிடம் இருந்து தமிழையும் தமிழ் மக்களையும் காப்போம்.!
நன்றி ஆசிரியர் சோழச்சி.!
தமிழ்நாடு முதல்வர் நீட் தேர்வுக்கு எதிரானவர் என்றால் மாணவர்கள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் அமைதியான ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளன. ஆனால், இந்த அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியிருப்பதும், சில இடங்களில் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே நுழைந்து மாணவர் இயக்க நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருப்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.
நீட் தேர்வின் கொடூரமான விளைவாக உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறியவரும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவரும்தான் தற்போதைய தமிழ்நாடு முதல்வர். அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்றவர், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, அதே நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவது பெரும் முரண்பாடாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் மாணவர் போராட்டங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களையே காவல்துறை தடுத்துள்ளது என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மறுபுறம், மாணவர்கள் தங்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த முரண்பட்ட தகவல்கள் அரசின் உண்மையான நிலைப்பாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டவுடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தேவையற்ற நடவடிக்கையாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உண்மையிலேயே உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அமைதியான ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி அளித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதும், அமைதியான முறையில் போராடுவதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயக அரசின் கடமையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட விரும்பும் மாணவர்களுக்கு உரிய அனுமதியையும் முழுமையான காவல் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
24/07/2026
#BanNEET #RejectNEET #StudentsProtest #StandWithStudents #TamilNadu #NEETExemption #SaveStudents #Democracy #RightToProtest #மாணவர்களோடுநிற்கிறோம் #நீட்ஒழியவேண்டும் #மாணவர்களின்குரல் #ஜனநாயகம் #தமிழ்நாடு #MMK #JawahirullahMLA
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@news7tamil@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil@Minnambalamnews@5GTamilMozhi
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் (https://t.co/UedAcpS6uW. Medical Physics) படிப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (BCM) 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வரும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைகழக ஆசிரியர் கழகம் (AUT) கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சமூகநீதியின் கோட்டையாக விளங்குவதற்குக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5), 16(4), 46 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருவதால் தான். அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாகவே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, நுழைவுத் தேர்வும் நடத்திவிட்டு, இறுதியில் “பிசிஎம் பிரிவிற்கு இடம் இல்லை” என்று கூறி சேர்க்கையை மறுத்ததாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், அது சட்டத்தின் ஆட்சியையும் சமூகநீதியையும் அலட்சியப்படுத்தும் செயலாகும்.
11 இடங்கள் மட்டுமே உள்ள பாடப்பிரிவாக இருந்தாலும், அரசின் 200-புள்ளி இடஒதுக்கீட்டு ரோஸ்டர் முறையின்படி சுழற்சி அடிப்படையில் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கும் உரிய ஆண்டுகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையாகும். SC (அருந்ததியர்) உள்ளிட்ட பிற உள் இடஒதுக்கீடுகள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிசிஎம் உள் இடஒதுக்கீடு மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரியது.
இந்த விவகாரம் ஒரு மாணவரின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பாதுகாத்து வரும் சமூகநீதிக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர்கல்வித்துறை அமைச்சரும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200-புள்ளி ரோஸ்டர் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதை உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக உரிய சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள், குறிப்பாக உள் இடஒதுக்கீட்டு நடைமுறைகள், தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
சமூகநீதிக் கொள்கையை மீறும் எந்த அதிகாரி அல்லது நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகநீதி என்பது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டின் உயிர்நாடி. அந்த அடிப்படை விழுமியத்தை எந்த நிர்வாகக் காரணத்தாலும், அலட்சியத்தாலும், தவறான விளக்கத்தாலும் பாதிக்க அனுமதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் பாதுகாக்க மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
22/07/2026
#சமூகநீதி
#BCMReservation #பிசிஎம்_உள்இடஒதுக்கீடு #ReservationRights
#JusticeForBCM #பாரதிதாசன்பல்கலைக்கழகம் #EducationalEquity #ConstitutionalRights
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@news7tamil@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil@Minnambalamnews@5GTamilMozhi
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களை சுரண்டும் மோடி அரசு:
*பெட்ரோல், டீசல் விலை ஏற்ற கொள்ளையை நிறுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைப்பது சாத்தியமில்லை என ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹர்தீப் சிங் பூரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது மோடி அரசின் பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்) ஆதரவு அரசியலின் வெளிப்படையான சாட்சியாக மாறியுள்ளது.
நாட்டின் சாதாரண மக்களின் பணத்தை சுரண்டி, சில பெருநிறுவனங்களையும் முதலீட்டு கார்ப்பரேட் சக்திகளையும் செழிக்கச் செய்வதே தற்போதைய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் உண்மையான பொருளாதார கொள்கை என்பதை பெட்ரோலிய நிறுவனங்களின் லாப கணக்குகள் தெளிவாக நிரூபிக்கின்றன.
இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக IOCL நிறுவனம் மட்டும் 2025-26 ஆம் ஆண்டில் ₹ 36,802 கோடி லாபம் ஈட்டியுள்ளது. BPCL மற்றும் HPCL நிறுவனங்களும் வரலாறு காணாத அளவில் லாபம் குவித்துள்ளன.
ஒருபுறம் மக்கள் அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்; மறுபுறம், பெட்ரோலிய நிறுவனங்களும் மோடி அரசும் மக்களின் துயரத்தை பணமாக மாற்றி பணப்பெருங்கடலில் மிதக்கின்றன.
இன்னும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பிளாக் ராக் (BlackRock), வேன்கார்டு (Vanguard) போன்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பெட்ரோலிய நிறுவனங்களில் பெரும் பங்குகளை வைத்துள்ளன. அதாவது இந்திய ஏழை, நடுத்தர மக்களிடமிருந்து எரிபொருள் விலை மூலமாக சுரண்டப்படும் பணத்தின் ஒரு பகுதி நேரடியாக சர்வதேச கார்ப்பரேட் முதலீட்டாளர்களின் லாபமாக செல்கிறது.
கலால் வரி, செஸ், கார்ப்பரேட் வரி, லாப ஈட்டு தொகை ஆகியவற்றின் மூலம் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் சுமார் ₹2.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இவ்வளவு வருவாய் கிடைத்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க சாத்தியமில்லை என்று கூறுவது மக்கள் மீது நடைபெறும் வெளிப்படையான பொருளாதார அநீதி ஆகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் உலக சந்தையில் விலை உயர்ந்தவுடன் உடனடியாக அதன் சுமை மக்களின் தோள்களில் ஏற்றப்படுகிறது. லாபம் மட்டும் கார்ப்பரேட்களுக்கு; சுமை மட்டும் மக்களுக்கா?
இந்தியாவில் இன்று எரிபொருள் விலை என்பது அரசின் வரிவசூல் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை, சிறு தொழில்கள், விவசாயம், போக்குவரத்து, உணவுப் பொருட்களின் விலை உள்ளிட்ட அனைத்தும் இந்த கொள்ளை விலையால் பாதிக்கப்படுகின்றன.
ஆனால் மோடி அரசுக்கு மக்களின் வேதனையை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே முக்கியமாகியுள்ளது. தேர்தல் காலங்களில் “சாதாரண மக்களின் அரசு” என்று பேசும் பிரதமர் மோடி, நடைமுறையில் பெருநிறுவனங்களின் நலன்களை காக்கும் முகவராகவே செயல்படுகின்றனர்.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் செஸ் வரிகளை குறைத்து, எரிபொருள் விலையை கணிசமாக குறைக்க வேண்டும். இல்லையெனில், மக்களை சுரண்டும் இந்த கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்ளைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
04/07/2026
#PetrolDieselPriceHike
#FuelPriceLoot
#ModiGovernment
#CorporatePolitics
#StopFuelLoot
#ReduceFuelPrice
#TaxTerrorism
#AntiPeopleModiGovt
#MMK
#Jawahirullah
#பெட்ரோல்விலை
#டீசல்விலை
#மோடிஅரசு
#கார்ப்பரேட்அரசியல்
#எரிபொருள்விலைகுறை
#மக்கள்விரோதஅரசு
#பெட்ரோல்டீசல்கொள்ளை
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil